10/9/09

௧௧ அக்டோபர் ௨00௯, பெர்ஜயா தங்கும் விடுதியில் நடைபெறும் ஜசெக பினாங்கு மாநில பேராளர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட மாநில செயற்குழுவால் முன்வைக்கப்படும் தீர்மானங்கள்.






11 அக்டோபர் 2009 ஜசெக பினாங்கு மாநில பேராளர் மாநாடு பின்வரும் தீர்மானங்களை ஒரு மனதாய் ஏற்றுக்கொள்கிறது :-






கொள்கை
  1. இனம், மதம், சமயம், ஆண், பெண் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, மலேசியர்களை முதன்மைப்படுத்தும், அனைத்து பிரிவு மக்களையும் ஒன்றுபடுத்தி, உலக அரங்கில் மலேசிய மக்களாக மட்டும் நம்மை அடையாளபடுத்திக்கொள்ளும் மலேசிய மலேசியர்களுக்கே என்ற நமது உயர்ந்த, உன்னதமிக்க கொள்கையை மறு உறுதிப்படுத்துகிறோம்;
  2. சுதந்திரம், நீதி, சமத்துவம், ஒருமைப்பாடு, மற்றும் அமைதியை முன்னிலைப்படுத்தும் சமூக நீதியை உருவாக்கும் நமது ஒன்றுபட்ட கடப்பாட்டை, தொடர்ந்தும் வலியுறுத்த உறுதிக்கொள்வோம்;
  3. ஆற்றல், பொறுப்பு, மற்றும் வெளிப்பாட்டுத்தன்மையை அடிப்படையாக கொண்ட மாசற்ற, ஒழுங்குமிக்க அரசாங்கமே, மக்களின் தேவைகளை உணரும், நல்லதொரு அரசாங்கமாக இருக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம்;


நாடாளாவிய சிறந்ததொரு மக்களாட்சி







  1. மக்கள் கூட்டணியில் ஒருமைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம், மலேசியர்களின் மனங்களை வென்று,

9/25/09

பினாங்கு மாநில லிம் குவான் எங் அவர்களின் பத்திரிகை அறிக்கை.

எந்தவொரு இடத்தையும் வரலாற்று பாரம்பரிய பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே உள்ளது.

பினாங்கு மாநில அரசின் சட்ட ஆலோசகரும், பினாங்கு மாநில நகர்ப்புற, புறநகர் திட்டமிடல், மேம்பாடு பிரிவும் இதற்கு முன்பு கூறியுள்ளதைப் போல், பினாங்கு மாநிலத்தில் எந்தவொரு இடத்தையும் வரலாற்று பாரம்பரிய பகுதியாக அறிவிப்பதற்கான அதிகாரம், பினாங்கு மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இல்லை என்பதை நான் மிண்டும் நினைவுறுத்த விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட இடத்தை அல்லது பகுதியை பாரம்பரிய, சரித்திர பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் டத்தோ ஸ்ரீ இராயிஸ் யாத்தீம் அமைச்சராக இருக்கும் தகவல், தொலைத்தொடர்பு, கலாச்சார அமைச்சின் கீழ் செயல்படும் சரித்திர, பாரம்பரிய ஆணையருக்குத்தான்(heritage commisioner) அந்த அதிகாரம் உள்ளது. சரித்திர பாரம்பரிய சட்ட பிரிவு 24 மற்றும் 30இன் கீழ், சரித்திர ஆணையருக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை, அல்லது பகுதியை சரித்திர, பாரம்பரிய பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் உள்ளது, அவ்வாறு அறிவிப்பதற்கு முன்பு, குறிப்பிட்ட மாநில அரசாங்கத்தின் ஒப்புதலை அவர் பெற வேண்டும் என்பது வழக்கம்.

கெராக்கான் உட்பட தேசிய முன்னணி கட்சிகள் தேவையில்லாமல் மக்கள் கூட்டணி அரசின் மீது பழி போட வேண்டும் என்பதற்காக, கம்போங் புவா பாலா போன்ற பகுதிகளை சரித்திர, பாரம்பரிய பகுதிகளாக அறிவிக்க பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு மறுக்கிறது என்பது போல் அறிக்கைகள் விடுத்து மக்களை குழப்புகின்றனர். குறிப்பிட்ட பகுதியை பாரம்பரிய, சரித்திர பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்பது இந்த தேசிய உறுப்பு கட்சிகளுக்கு தெரியும்; தெரிந்தும் இவர்கள் நடத்துவது நாடகம்.

அதேப்போல, எங்கள் மாநில அரசுக்கு காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது; காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம், மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே உள்ளது. கடந்த ஜூன் 30 ஆம் நாள், கொம்தார் கட்டடத்தில் எனது மாநில அரசாங்கத்திற்கு எதிராக சிலர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக அவர்களை வேறு இடத்திற்கு அழைத்து சென்று, தங்களது விருப்பு, வெறுப்புகளை தெரிவிப்பதற்கான உரிமையை மறுக்காமல், அவர்களின் ஆர்ப்பாட்ட மகஜரையும் ஏற்றுக்கொண்ட எனது அரசியல் செயலாளரான, கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் இங் வேய் எய்க்கின் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பொழுது கெரக்கான் உட்பட, இந்த தேசிய முன்னணி கட்சிகள் வாய்மூடி மௌனமாக இருந்தது ஏன்?

கம்போங் புவா பாலா நில விற்பனை சம்பந்தமாக நான் எந்தவொரு பத்திரத்திலோ, கோப்புகளிலோ கையெழுத்து போட்டதில்லை என்பதை இவ்வேளையில் நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். கம்போங் புவா பாலா நிலத்தை மட்டுமல்லாமல், அந்த கிராமத்தில் வாழ்ந்த மக்களின் உரிமைகளையும் சேர்த்து விலைப்பேசி விற்று சென்றவர் முன்னால் முதல்வர் டான்ஸ்ரீ கோ சூ கூன்தான். நில விற்பனை சம்பந்தமான அனைத்து பத்திரங்களையும், கோப்புகளையும் முழுமையாக கையெழுத்திட்டு ஏறக்குறைய முழு நில விற்பனையும் உறுதி செய்தது முன்னாள் மாநில அரசுதான்.

கெராக்கான், மஇகா, போன்ற தேசிய முன்னணி கட்சிகளோடு சேர்ந்து, அவர்களின் புதிய சகாக்களும், நான்தான் கம்போங் புவா பாலா நில விற்பனை சம்பந்தமான கோப்புகளை கையெழுத்திட்டு, நில விற்பனையை முழுமை செய்ததாக பொய்களை பரப்பி வருகின்றனர். நான் பினாங்கு மாநில முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து இதுநாள் வரை, குறிப்பிட்ட மேம்பாட்டு நிறுவனத்திற்கு சாதகமாகவோ, அல்லது அந்த நிலத்தை வாங்கிய கூட்டுறவு கழகத்திற்கு சாதகமாகவோ எந்தவொரு பாத்திரத்திலோ, கோப்பிலோ நான் கையெழுத்து இட்டதேயில்லை. கம்போங் புவா பாலா மக்களின் உரிமைகளையும் சேர்த்து அந்த நில விற்பனையை முழுமையாக்கி விட்டிருந்தது முன்னாள் தேசிய முன்னணி மாநில அரசுதான்.

நில விற்பனையை உறுதிப்படுத்தும் வண்ணம் அனைத்து கோப்புகளும், பத்திரங்களும் கையெழுத்திடப்பட்ட பின்னர், அந்த நில விற்பனையை தடுக்க சட்டப்பூர்வமாக எங்களால் எதுவுமே செய்ய முடியாத நிலையில்தான் அந்த நிலம் கூட்டுறவுக் கழகத்திற்கு மாற்றப்பட்டது. பொதுவாக, எந்தவொரு நிலம் மற்றும் வீட்டு பரிவர்த்தனைகளில், சட்டப்பூர்வமான அனைத்து கோப்புகளும் இரு தரப்பாலும் கையெழுத்திடப்பட்டு, குறிப்பிட்ட நிலம் அல்லது வீட்டுக்கான பிரிமியம் தொகை செலுத்தப்பட்ட பின்னர் அந்த நிலமோ, வீடோ உரிமை மாற்றம் செய்யப்படும். இதுதான் கம்போங் புவா பாலா நில விற்பனையிலும் நடந்தது. கம்போங் புவா பாலா நில விற்பனை சம்பந்தமான அனைத்து கோப்புகளும் முனால் மாநில முதல்வர் கோ சூ கூனால் கையெழுத்திடப்பட்ட பின்னர், அந்த நிலத்திற்கான பிரிமியம் தொகையை செலுத்தப்பட்டதும் அந்த நில உரிமை மாற்றம் பெரும்; அந்த நில உரிமையை மாற்றாமல் இருப்பதற்கு சட்டப்பூர்வமாக எதுவுமே செய்ய முடியாது. முன்னாள் மாநில முதல்வரான டான்ஸ்ரீ டாக்டர் கோ சூ கூன், கம்போங் புவா பாலா நிலத்தோடு சேர்ந்து அந்த கிராம மக்களின் உரிமையையும் சேர்த்து அனைத்து கோப்புகளிலும் கையெழுத்திட்டு விற்று விட்டார். கம்போங் புவா பாலா நில விற்பனை சம்பந்தமாக நான் எந்தவொரு கோப்பிலும் கையெழுத்திடவில்லை. அதற்கு பிறகு நடந்தது அனைத்துமே, நில விற்பனையின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளே ஆகும்.

கம்போங் புவா பாலா நிலம் விற்கப்பட்ட பிறகு, எங்களால் செய்ய முடிந்தது அந்த கிராமத்து மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி, அவர்களுக்கு சாதகமான ஒரு இழப்பீடை வாங்கி தருவதுதான் ஆகும். கம்போங் புவா பாலா மக்களை புறம்போக்குவாசிகளாக முத்திரையிட்டு அவர்களுக்கு 75,000 ரிங்கிட் மதிப்புடைய மலிவு விலை வீடுகளை மட்டுமே இழப்பீடாக வழங்க முடியும் என்று கெடுபிடி செய்தது முன்னாள் தேசிய முன்னணி மாநில அரசு; கம்போங் புவா பாலா மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த அந்த இடத்திலேயே 6 இலட்சம் வெள்ளி மதிப்புள்ள இரட்டை மாடி வீடுகளை பெற்று தருவதற்கு மேம்பாட்டு நிறுவனத்திற்கு நெருக்குதல் தந்து, கம்போங் புவா பாலா மக்களை விலைமதிப்புள்ள வீடுகளைப் பெற்றுத் தந்துள்ளது இந்நாள் மாநில அரசு. கம்போங் புவா பாலா மக்களை புறம்போக்கு வாசிகளாக முத்திரையிட்டு, அவர்களை மலிவு விலை வீடுகளுக்கு அனுப்பப்பார்த்தது முன்னாள் தேசிய முன்னணி அரசு; கம்போங் புவா பாலா மக்களுக்கு அவர்கள் உரிமையை மீட்டுத்தந்து, அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே விலை மதிப்புள்ள இரட்டை மாடி வீடுகளை வாங்கித்தந்தது இந்நாள் மக்கள் கூட்டணி அரசு. மக்கள் உரிமைகளை பறித்து, அவர்களுக்கு நெருக்குதல் தந்தது தேசிய முன்னணி, மக்களுக்கு உரிமையை மதித்து அவர்களுக்கு சரியான இழப்பீடை வாங்கித்தந்தது மக்கள் கூட்டணி. இதுதான் தேசிய முன்னணிக்கும், மக்கள் கூட்டணிக்கும் உள்ள வித்தியாசம்.


லிம் குவான் எங்,
பினாங்கு மாநில முதல்வர்.

8/20/09

பினாங்கு துணை முதல்வர் இராமசாமி அவர்களின் வாழ்த்துசெய்தி

பினாங்கு இந்தியர் சங்கத்தின் 10வது ஆண்டு மும்மொழி போட்டிகளுக்கான சிறப்பு விழா மலருக்கு எனது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமைக் கொள்கிறேன்.பினாங்கு இந்தியர் சங்கம்,கடந்த 9 ஆண்டுகளாக பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக மும்மொழி போட்டிகளை நடத்தி வருகிறது என்பதை அறிந்து எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அதே வேளை இந்த 10வது ஆண்டு மும்மொழி போட்டிகள் சிறப்பே நடைப்பெற்று முடிவுற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பினாங்கு மாநிலத்தை அறிவார்ந்த மாநிலமாக திகழ வைக்க வேண்டும் என்பது,பினாங்கு மாநில அரசாங்கத்தின் இலட்சியங்களுள் ஒன்று.அறிவார்ந்த மாநிலத்தின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைவது மாணவ சமுதாயமே.பினாங்கு மாநிலத்தின் மாணவ சமுதாயம்,மிகச்சிறந்த மாணவ சமுதாயமாக அமைய வேண்டும் என்பதற்காக பினாங்கு மாநில அரசு பல்வேறு ஆக்ககரமான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் 1.5 மில்லியன் ரிங்கிட்டை பகிர்ந்தளிக்க மாநில அரசு முன்வந்துள்ளது.இதன் வழி தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களும்,அறிவார்ந்த சமுதாயத்தை நோக்கி செல்லும் பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்ற முடியும்.
பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பளிகளின் வளர்ச்சியிலும்,தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சியிலும் பினாங்கு மாநில அரசின் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பது,பினாங்கு இந்தியர் சங்கம் போன்ற அமைப்புகளின் இவ்வாறான முயற்சிகளும்தான்.பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்த பினாங்கு இந்தியர் சங்கம் ஏற்று நடத்தும் இந்த மும்மொழி போட்டிகள்,வருங்காலத்தில் மேலும் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள்.

இவ்வேளையில்,தமிழ்ப்பள்ளி மாணவர்கள்,பேரறிஞர் அண்ணா கூறியதைப் போல "விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்".மலாய் மொழியையும்,ஆங்கில மொழியையும் சிறப்பாக கற்கும் அதே வேளை,நமது தாய்மொழியான தமிழ் மொழியை எக்காரணத்தைக் கொண்டும் புறந்தள்ளக் கூடாது என்பதை நினைவுறுத்துகிறேன்.

பினாங்கு இந்தியர் சங்கம் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடத்தி வரும் இந்நிகழ்வு சிறப்பான நிகழ்வாகும்.இந்த 10வது ஆண்டு மும்மொழி போட்டிகளை சிறப்பாக ஏற்ப்பாடு செய்துள்ள ஏற்பாட்டுக் குழுவினருக்கும்,அவர்களுக்கு முழு ஆதரவை வழங்கி வரும் பினாங்கு இந்தியர் சங்க செயற்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள் உரித்தாகட்டும். தொடரட்டும் உங்கள் சமுதாய சேவை. நன்றி.

இக்கண்,




பேராசிரியர் இராமசாமி,
பினாங்கு மாநில துணை முதல்வர்.

7/10/09

Tamil statements

Statement #1
கோ சூ கூன் தவறுகளை ஒப்புக்கொண்டு, அவற்றை சரி செய்ய முன்வர வேண்டும்!!

பினாங்கு மாநில முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் பிரதமர் துறையின் அமைச்சருமான கோ சூ கூன் பினாங்கு மக்களின் மீது தனக்கு சிறிதும் அக்கறையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தனது பேச்சுகளாலும், செயல்களினாலும் நிருபித்திருக்கிறார். ஏறக்குறைய சுமார் இருபது ஆண்டுகள் பினாங்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்திருந்தாலும், பினாங்கு மக்களின் மீது தனக்கு அறவே அக்கறையில்லை என்பதைத்தான் அவரது அண்மைய அறிக்கைகள் காட்டுகின்றன.

கம்போங் புவா பாலா விவகாரத்தில், தொடர்ச்சியாக தற்போதைய பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் மீது சேற்றை அள்ளி வீசும் வண்ணத்திலான கருத்துகளை வெளியிடுவதிலிருந்தே அவரின் உண்மையான நோக்கம் புரிகிறது. ஒரு பினாங்கு குடிமகன் என்ற விதத்திலும், பினாங்கு மாநிலத்தில் சுமார் இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த முதல்வர் என்ற முறையிலோ, கோ சூ கூன் ஒரு ஆக்ககரமான முடிவை எற்படுத்தித்தர முயற்சிகள் எடுக்கவில்லை. கோ சூ கூன், பினாங்கு மாநிலத்தில், முன்னாள் கெராக்கான் – தேசிய முன்னணி அரசு விட்டுச்சென்றுள்ள தவறுகளை மறைக்க முயல்வதோடு மட்டுமல்லாமல், அந்த தவறுகளை திருத்த, உதவவும் மறுக்கிறார்.

கம்போங் புவா பாலா விவகாரத்தில், முன்னாள் தேசிய முன்னணி அரசு செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு மட்டுமல்லாமல், முன்னாள் தேசிய முன்னணி அரசு செய்த தவறுகளை மக்கள் கூட்டணியே திருத்திக் கொள்ளட்டும் என்ற வாக்கில் செயல்படுகிறார் கோ சூ கூன். தனது ஆட்சிக்காலத்தில், பினாங்கு மாநிலத்தில் பல்வேறான நில ஊழல்கள் சம்பந்தமாக விளக்கங்களை அளிக்காமல், தொடர்ச்சியாக மக்கள் கூட்டணியின் மீது சேற்றை வாரி இறைப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.

பினாங்கு மாநிலத்தில் நிகழ்ந்த மற்றுமொரு நில ஊழலில், முன்னாள் தேசிய முன்னணி அரசு செய்த தவற்றால் ஏற்பட்ட சுமார் 40 மில்லியன் நிதிச்சுமைக்கு, முன்னாள் தேசிய முன்னணி அரசின் ஆட்சிக்குழு உறுப்பினரில் ஒருவரான டாக்டர் ஹில்மீ யஹ்யா தவறுகள் நிகழ்ந்துள்ளதை ஒப்புக்கொண்டதைப் போல், கோ சூ கூன் தவறுகளை ஒப்புக்கொள்ள முன்வர வேண்டும்.

முன்னாள் தேசிய முன்னணி இழைத்த தவறுகளை மூடி மறைப்பதில் முனைப்பு காட்டும் கோ சூ கூன், தனது ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்து விட்ட இந்த தவறுகளை திருத்துவதற்கும் முனைப்பு காட்ட வேண்டும். தற்போதைய மாநில அரசோடு இணைந்து செயல்படுவதன் மூலமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்பதை உணர்ந்து, பிரதமர் நஜிப்பிற்கு அழுத்தம் தந்து கம்போங் புவா பாலா மக்களின் பிரச்சனையைத் தீர்க்க கோ சூ கூன் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


Statement #2

கம்போங் புவா பாலா கற்றுத்தரும் பாடங்களும், வாய்ப்புகளும்!!

கம்போங் புவா பாலா பிரச்சனை திடிரென்று பெரிதாக வெடித்திருக்கின்றது. கம்போங் புவா பாலா பிரச்சனையை திடிரென்று ஏற்பட்டுள்ள வெறும் குழப்ப நிலை என்று மட்டும் பார்க்காமல், வருங்காலத்தில் இது போன்ற குழப்ப நிலைகள் ஏற்படாமிலிருக்க எவ்வாறன அனுகுமுறைகளை கடைப்பிடிக்கலாம் என்று ஆரய்வதுதான் சிறந்தது. மாநில, மத்திய அரசுக்களின் நிலம் மற்றும் வீட்டுடமைகளைப் பற்றிய சட்டங்களில் தென்படும் பலவீனங்களை சரி செய்வது எப்படி என்ற ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

நில கையகப்படுத்தும் சூழ்நிலைகள் ஏற்படுகையில், சம்பந்தப்பட்ட நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருந்து வரும் மக்களின் கருத்துகள் கண்டறியப்பட வேண்டும். அதே வேளையில், அரசு நிலத்தை கையகப்படுத்தும் சூழ்நிலையில், அந்நிலத்தின் விலையை உறுதிப்படுத்துவதற்கு, சில குறிப்பிட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அரசு நில விற்பனையில் குறிப்பிட்ட வழிமுறைகள் பின்பற்றப்படும்போது, அரசு நிலமானது, மிகக் குறைந்த விலையில் விலைபோவதையும், நில விற்பனைகளில் ஏற்படும் அரசியல் தலையீடுகளையும் தவிர்க்க முடியும். தற்போதுள்ள மாநில, மத்திய சட்ட வரைவுகளில், நிலத்தில் குடியிருப்பவர்களின் உரிமைகள் தற்காக்கப்படுவதில்லை, இந்த நிலையின் காரணமாகவே, பல வேளைகளில் நியாயமற்ற நிலையில் பல குடியிருப்புகள் உடைக்கப்படுகின்றன; உடைத்தப்பிறகு இழப்பீடும் மறுக்கப்படுகிறது.

பாரம்பரிய, கலாச்சார கட்டடங்களை அல்லது இடங்களை தற்காப்பதற்கு போதுமான சட்ட வரைவுகள் இதுநாள் வரையில் இல்லை, அப்படி சட்ட வரைவுகள் இருந்தாலும் அது செயல்திறனற்ற ஒன்றாகவே இருந்து வருகிறது என்பதுதான் உணமை. ஒரு இடம் மேம்பாட்டிர்கு எடுத்துக்கொள்ளப்படும் போது, பாரம்பரிய, சரித்திர கட்டடங்களையும், இடங்களையும் தற்காப்பதற்கு மட்டுமல்லாமல், ஒரு இனத்தின், நாட்டின் கலாச்சார, சரித்திர, பாரம்பரியத்தின் நாடித்துடிப்பை தற்காக்கவும் சட்ட வரைவுகள் அவசியாமக இருக்க வேண்டும்.

சட்ட வரைவுகள், குறிப்பிட்ட வழிமுறைகளை தவிர்த்து, குடியிருப்பாளர்களின் உரிமைகளை, குறிப்பாக, சொந்த வீடு வாங்க முடியாமல், அரசாங்க நிலங்களிலோ, தனியார் நிலங்களிலோ குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வரும் ஏழை மக்களின் நலன்களை பாதுகாக்க அரசியல் கரிசனை இருக்க வேண்டும். அரசாங்கம், இதுபோன்ற ஏழை, எளியவர்களின் குடியிருப்பிற்காக தரமான, குறைந்த விலை வீடுகளை கட்டும் அதிகமான திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும். ஏழை மக்களை சார்ந்த நிலம் மற்றும் குடியிருப்பு பிரச்சனைகள் ஆத்மார்த்தமான நடவடிக்கைகளின் மூலமே தீர்க்கப்படும் என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

கம்போங் புவா பாலா நிகழ்வுகள், பினாங்கு மாநில அரசுக்கு மட்டுமின்றி மலேசியாவிலுள்ள மற்ற மாநில அரசுகளுக்கும், குறிப்பாக மத்திய அரசுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அரசியல், இன வேறுபாடுகளை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல், நமது நாட்டு சட்ட வரைவுகளிலும், இவ்வாறான பிரச்சனைகளை கையாளும் வழிமுறைகளிலும் தென்படும் பலவீனங்களை சரி செய்வதற்கான அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிரதமர் துறையில் அமைச்சராக இருக்கும் கோ சூ கூன், இந்த நிலம் மற்றும் குடியிருப்பு சார்ந்த சட்ட மறுவரைவுகளில் முக்கிய பங்காற்ற முடியும். குறிப்பிட்ட சட்ட மறுவரைவுகளை மேற்கொள்ள பிரதம்ர நஜிப்பீற்கு கோ சூ கூன் ஆலோசனகள் வழங்க வேண்டும். 50 வருட தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் வரையப்பட்ட சட்டத்திட்டங்களிலும், மக்கள் மீது அக்கறையில்லாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தற்காத்துப் பேசிக்கொண்டிருப்பதை விடுத்து சில ஆக்ககரமான நடவடிக்கைகளில் தேசிய முன்னணி அரசாங்கம் இறங்க வேண்டும். உடனடியாக, நிலம் மற்றும் குடியிருப்புகள் சம்பந்தமான சட்ட மறுவரைவுகளை தேசிய முன்னணி அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அரசியல் இலாபத்திற்காக பக்க சார்பான, நியாயமில்லாத சட்டங்களை தற்காத்துக் கொண்டிருக்கக் கூடாது.