9/25/09

பினாங்கு மாநில லிம் குவான் எங் அவர்களின் பத்திரிகை அறிக்கை.

எந்தவொரு இடத்தையும் வரலாற்று பாரம்பரிய பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே உள்ளது.

பினாங்கு மாநில அரசின் சட்ட ஆலோசகரும், பினாங்கு மாநில நகர்ப்புற, புறநகர் திட்டமிடல், மேம்பாடு பிரிவும் இதற்கு முன்பு கூறியுள்ளதைப் போல், பினாங்கு மாநிலத்தில் எந்தவொரு இடத்தையும் வரலாற்று பாரம்பரிய பகுதியாக அறிவிப்பதற்கான அதிகாரம், பினாங்கு மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இல்லை என்பதை நான் மிண்டும் நினைவுறுத்த விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட இடத்தை அல்லது பகுதியை பாரம்பரிய, சரித்திர பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் டத்தோ ஸ்ரீ இராயிஸ் யாத்தீம் அமைச்சராக இருக்கும் தகவல், தொலைத்தொடர்பு, கலாச்சார அமைச்சின் கீழ் செயல்படும் சரித்திர, பாரம்பரிய ஆணையருக்குத்தான்(heritage commisioner) அந்த அதிகாரம் உள்ளது. சரித்திர பாரம்பரிய சட்ட பிரிவு 24 மற்றும் 30இன் கீழ், சரித்திர ஆணையருக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை, அல்லது பகுதியை சரித்திர, பாரம்பரிய பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் உள்ளது, அவ்வாறு அறிவிப்பதற்கு முன்பு, குறிப்பிட்ட மாநில அரசாங்கத்தின் ஒப்புதலை அவர் பெற வேண்டும் என்பது வழக்கம்.

கெராக்கான் உட்பட தேசிய முன்னணி கட்சிகள் தேவையில்லாமல் மக்கள் கூட்டணி அரசின் மீது பழி போட வேண்டும் என்பதற்காக, கம்போங் புவா பாலா போன்ற பகுதிகளை சரித்திர, பாரம்பரிய பகுதிகளாக அறிவிக்க பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு மறுக்கிறது என்பது போல் அறிக்கைகள் விடுத்து மக்களை குழப்புகின்றனர். குறிப்பிட்ட பகுதியை பாரம்பரிய, சரித்திர பகுதியாக அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்பது இந்த தேசிய உறுப்பு கட்சிகளுக்கு தெரியும்; தெரிந்தும் இவர்கள் நடத்துவது நாடகம்.

அதேப்போல, எங்கள் மாநில அரசுக்கு காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது; காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம், மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே உள்ளது. கடந்த ஜூன் 30 ஆம் நாள், கொம்தார் கட்டடத்தில் எனது மாநில அரசாங்கத்திற்கு எதிராக சிலர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக அவர்களை வேறு இடத்திற்கு அழைத்து சென்று, தங்களது விருப்பு, வெறுப்புகளை தெரிவிப்பதற்கான உரிமையை மறுக்காமல், அவர்களின் ஆர்ப்பாட்ட மகஜரையும் ஏற்றுக்கொண்ட எனது அரசியல் செயலாளரான, கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் இங் வேய் எய்க்கின் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பொழுது கெரக்கான் உட்பட, இந்த தேசிய முன்னணி கட்சிகள் வாய்மூடி மௌனமாக இருந்தது ஏன்?

கம்போங் புவா பாலா நில விற்பனை சம்பந்தமாக நான் எந்தவொரு பத்திரத்திலோ, கோப்புகளிலோ கையெழுத்து போட்டதில்லை என்பதை இவ்வேளையில் நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். கம்போங் புவா பாலா நிலத்தை மட்டுமல்லாமல், அந்த கிராமத்தில் வாழ்ந்த மக்களின் உரிமைகளையும் சேர்த்து விலைப்பேசி விற்று சென்றவர் முன்னால் முதல்வர் டான்ஸ்ரீ கோ சூ கூன்தான். நில விற்பனை சம்பந்தமான அனைத்து பத்திரங்களையும், கோப்புகளையும் முழுமையாக கையெழுத்திட்டு ஏறக்குறைய முழு நில விற்பனையும் உறுதி செய்தது முன்னாள் மாநில அரசுதான்.

கெராக்கான், மஇகா, போன்ற தேசிய முன்னணி கட்சிகளோடு சேர்ந்து, அவர்களின் புதிய சகாக்களும், நான்தான் கம்போங் புவா பாலா நில விற்பனை சம்பந்தமான கோப்புகளை கையெழுத்திட்டு, நில விற்பனையை முழுமை செய்ததாக பொய்களை பரப்பி வருகின்றனர். நான் பினாங்கு மாநில முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து இதுநாள் வரை, குறிப்பிட்ட மேம்பாட்டு நிறுவனத்திற்கு சாதகமாகவோ, அல்லது அந்த நிலத்தை வாங்கிய கூட்டுறவு கழகத்திற்கு சாதகமாகவோ எந்தவொரு பாத்திரத்திலோ, கோப்பிலோ நான் கையெழுத்து இட்டதேயில்லை. கம்போங் புவா பாலா மக்களின் உரிமைகளையும் சேர்த்து அந்த நில விற்பனையை முழுமையாக்கி விட்டிருந்தது முன்னாள் தேசிய முன்னணி மாநில அரசுதான்.

நில விற்பனையை உறுதிப்படுத்தும் வண்ணம் அனைத்து கோப்புகளும், பத்திரங்களும் கையெழுத்திடப்பட்ட பின்னர், அந்த நில விற்பனையை தடுக்க சட்டப்பூர்வமாக எங்களால் எதுவுமே செய்ய முடியாத நிலையில்தான் அந்த நிலம் கூட்டுறவுக் கழகத்திற்கு மாற்றப்பட்டது. பொதுவாக, எந்தவொரு நிலம் மற்றும் வீட்டு பரிவர்த்தனைகளில், சட்டப்பூர்வமான அனைத்து கோப்புகளும் இரு தரப்பாலும் கையெழுத்திடப்பட்டு, குறிப்பிட்ட நிலம் அல்லது வீட்டுக்கான பிரிமியம் தொகை செலுத்தப்பட்ட பின்னர் அந்த நிலமோ, வீடோ உரிமை மாற்றம் செய்யப்படும். இதுதான் கம்போங் புவா பாலா நில விற்பனையிலும் நடந்தது. கம்போங் புவா பாலா நில விற்பனை சம்பந்தமான அனைத்து கோப்புகளும் முனால் மாநில முதல்வர் கோ சூ கூனால் கையெழுத்திடப்பட்ட பின்னர், அந்த நிலத்திற்கான பிரிமியம் தொகையை செலுத்தப்பட்டதும் அந்த நில உரிமை மாற்றம் பெரும்; அந்த நில உரிமையை மாற்றாமல் இருப்பதற்கு சட்டப்பூர்வமாக எதுவுமே செய்ய முடியாது. முன்னாள் மாநில முதல்வரான டான்ஸ்ரீ டாக்டர் கோ சூ கூன், கம்போங் புவா பாலா நிலத்தோடு சேர்ந்து அந்த கிராம மக்களின் உரிமையையும் சேர்த்து அனைத்து கோப்புகளிலும் கையெழுத்திட்டு விற்று விட்டார். கம்போங் புவா பாலா நில விற்பனை சம்பந்தமாக நான் எந்தவொரு கோப்பிலும் கையெழுத்திடவில்லை. அதற்கு பிறகு நடந்தது அனைத்துமே, நில விற்பனையின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளே ஆகும்.

கம்போங் புவா பாலா நிலம் விற்கப்பட்ட பிறகு, எங்களால் செய்ய முடிந்தது அந்த கிராமத்து மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி, அவர்களுக்கு சாதகமான ஒரு இழப்பீடை வாங்கி தருவதுதான் ஆகும். கம்போங் புவா பாலா மக்களை புறம்போக்குவாசிகளாக முத்திரையிட்டு அவர்களுக்கு 75,000 ரிங்கிட் மதிப்புடைய மலிவு விலை வீடுகளை மட்டுமே இழப்பீடாக வழங்க முடியும் என்று கெடுபிடி செய்தது முன்னாள் தேசிய முன்னணி மாநில அரசு; கம்போங் புவா பாலா மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த அந்த இடத்திலேயே 6 இலட்சம் வெள்ளி மதிப்புள்ள இரட்டை மாடி வீடுகளை பெற்று தருவதற்கு மேம்பாட்டு நிறுவனத்திற்கு நெருக்குதல் தந்து, கம்போங் புவா பாலா மக்களை விலைமதிப்புள்ள வீடுகளைப் பெற்றுத் தந்துள்ளது இந்நாள் மாநில அரசு. கம்போங் புவா பாலா மக்களை புறம்போக்கு வாசிகளாக முத்திரையிட்டு, அவர்களை மலிவு விலை வீடுகளுக்கு அனுப்பப்பார்த்தது முன்னாள் தேசிய முன்னணி அரசு; கம்போங் புவா பாலா மக்களுக்கு அவர்கள் உரிமையை மீட்டுத்தந்து, அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே விலை மதிப்புள்ள இரட்டை மாடி வீடுகளை வாங்கித்தந்தது இந்நாள் மக்கள் கூட்டணி அரசு. மக்கள் உரிமைகளை பறித்து, அவர்களுக்கு நெருக்குதல் தந்தது தேசிய முன்னணி, மக்களுக்கு உரிமையை மதித்து அவர்களுக்கு சரியான இழப்பீடை வாங்கித்தந்தது மக்கள் கூட்டணி. இதுதான் தேசிய முன்னணிக்கும், மக்கள் கூட்டணிக்கும் உள்ள வித்தியாசம்.


லிம் குவான் எங்,
பினாங்கு மாநில முதல்வர்.